புதன், 14 பிப்ரவரி, 2018

ஆண்டாள்

ஆண்டாள்
==============================================ருத்ரா


கோவில்களை
விட்டிறங்கி
மூலை முடுக்கெல்லாம்
இப்போது ஒலிக்கிறாள்.
அவள் பற்றிய
சொல்லையும்  பொருளையும்
உரைத்து பார்ப்பதில்
சொல் தான் தேய்ந்து போகும்.
அந்த வெளிச்சம் மறையாது.

ஒருவன்
என்னைக் கழுதை என்று
சொல்லி விட்டுப்போனான்.
அப்போது நான் ஒரு கழுதை  தான்.
ஆயிரம் பேர் வந்து
"உன்னை கழுதை "என்று சொன்னானாமே
என்று கேட்ட போது
நான் ஆயிரம் கழுதை ஆகிவிட்டேன்.
எறும்பு புற்றை இமயமலை ஆக்கும்
"பஜனை" சத்தங்களால்
செவிகள் கிழிவது தான் மிச்சம்!


கேவலம்
என்று ஒரு உபனிஷதம் இருக்கிறது.
கைவல்யம் என்ற பெயர்ச்சொல்
ஆகி
அது பிரம்மம் மட்டுமே
என்று விரித்து உரைக்கிறது.
 பிரம்மம் என்ன 
கேவலம்ஆகி விட்டதா?
கேனோன் (கேணையன் )
என்றோர் உபனிஷதமும் உண்டு.
பிரம்மன் யார் என்று
அது
கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
அவன் என்ன கேணயனா?

ஒரு கல் வந்து
கல்லாக இருக்கும்
கடவுளிடம்
அர்ச்சனை செய்யவந்தாலும்
இந்தக்  கல்  அந்தக்கல்லிடம் 
"உன் கோத்திரம்"
என்ன என்று கேட்கிறது.
ஆண்டாள்
தன் விண்ணப்பத்தை
ஆண்டவன் என்னும்
அந்த பெருமாளிடம்
அர்ச்சனையாய் வைத்திருந்தாலும்
என்ன கோத்திரம்
என்ற கேள்வி தானே வந்திருக்கும்.
அந்த மனவெளி உணர்ச்சியின்
"ஹெலூஸினேஷன்"
ஒரு ரசம் பிழிந்த தமிழாய்
நமக்கு கிடைத்திருக்கிறது.
தமிழின் வரப்பிரசாதம்
என்று நாம் கன்னத்தில் ஒற்றி
வணங்குவதும்
அற்புதம் தானே.

கடவுளை
"அஜாதம் அவர்ணம்" என்றெல்லாம்
போற்றி போற்றி என்று
பாடும்போது
அவன் பிறப்பும்
ஒரு வேரற்று தானே தொங்குகிறது.
பக்தி என்பதே பக்குவம்
என்பதன் மறு வடிவம்
பக்குவமற்ற பக்தியை
எப்படி அழைப்பது?
வேண்டாம்!
இருட்டில் இருப்பவர்கள் தான்
தீவட்டிகள் தூக்கி அலையவேண்டும்.

================================================

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

மூட்டைப்பூச்சிகள்

மூட்டைப்பூச்சிகள்
=======================================ருத்ரா

உன்னிடம் சரணடைந்தேன்.
இனி என்கால்கள் உன் சுவட்டில்.
என் பார்வைகள் உன் விழியில்.
என் கனவுகள்
தினம் தினம் நீ
அவிழ்த்தெறியும் பூச்சரங்கள்.
என் முகத்தை நீ
இன்னும் பார்க்கவில்லை.
என் சொல் உன் செவியில்
இன்னும் விழுந்ததில்லை.
நீ இன்றி
இந்த வாழ்க்கையெல்லாம்
வெறும் தூசு துரும்புகள்.
என்னைக்காதலிக்கவில்லை
என்றாவது
என் முகம் பார்த்து சொல்லிவிடு.
அது போதும்.
அந்த கல்லறையில் நான் தூங்க..
அந்த தூங்குமூஞ்சி மரங்களின்
சிறு சிறு சாமரங்களைப்போன்ற‌
அந்த பூக்கள்தாலாட்டும்
அது போதும்.
அது தூவும் மகரந்தங்கள் எல்லாம்
உன் நினைவு தான்.
பயப்படாதே
நான் இன்னும் சாகவில்லை.
நான் போகும்போதும் வரும்போதும்
அந்த பாதையில்
உள்ள கல்லறைத்தொட்டத்தில்
ஒரு இடம் பார்த்திருக்கிறேன்.
செண்ட் அதிக விலையில்லை.
ஒரு மூட்டைப்பூச்சி
மருந்து பாட்டிலின் விலை தான்.
.....
.........
"டமார்."

எதிரே வரும் லாரி மரத்தில் மோத‌
நடுவில் நான் நசுங்கினேன்.
ஆனால்
என்ன ஆச்சரியம்
நான் பிழைத்துக்கொண்டேன்.
அதில் நசுங்கி கூழாகி இறந்தது
அந்த காதல் மட்டுமே!
அந்த மருந்து பாட்டிலின் மருந்தை
தெளிக்காமலேயே
என்னை பிச்சு பிச்சுக்கடித்த‌
காதல் எனும் மூட்டைப்பூச்சிகள்
செத்தே போயின!

=================================================


திங்கள், 2 அக்டோபர், 2017

நடக்கிறேன்




நடக்கிறேன்
===========================================ருத்ரா

மண்ணின் நீண்ட பாதையெல்லாம்
ரோஜாசருகுகள்.
அதன் மீது கால்வைத்து நடப்பதா?
தயங்கி தயங்கி நடக்கிறேன்.
சர்ரெக் என்ற அவற்றின்
ஒலிக்கூட்டங்களுக்குள்
தனியாயும் சில ஒலிகள்.
அது எங்கோ தொலைதூரகடலுக்குள்
நங்கூரமாய் விழுகிறது.
நான் நடக்கிறேன்.
பாதையில் பல்வேறு காலடிச்சுவடுகள்.
ரோஜாச்சருகுகள் மறைந்து போயின.
என் எண்ணம் எப்போதும்
உயர்ந்து கொண்டே போனதுண்டு.
யார் அந்த ராட்சத ரெக்கைகளை எனக்கு
ஒட்டவைத்தார்கள்?
என்று எனக்குத்தெரியாது.
அவற்றை சடசடத்த போது
அவற்றில் ஒட்டிக்கிடந்த‌
அந்த நட்சத்திரங்கள் தான்
தரையில் உதிர்ந்தன.கூடவே
அந்த ரோஜாசருகுகளும்!
வாழ்க்கையின் கசப்புகளுக்கு
நடுவில் தேன் துளிகளாக‌
அந்த ரோஜா சருகுகள்.
ஓரப்பார்வையாய் அவள் ஒரு நாள்
என்னைப்பார்த்தாள்.
அதன் பிறகு அவள் முழுமுகம் பார்த்து
அவள் மனம் நுழைய விரும்பி
நடையாய் நடந்திருக்கிறேன்.
இன்னும் தான் நடந்து கொண்டிருக்கிறேன்.
என் கூடு.என் குஞ்சுகள்.
என் இன்னுயிர்த்துணையாய்
அந்த பறவையையும்
தோள் மீது சுமந்து கொண்டு
நடக்கிறேன்.
நாட்கள்
இலைச்சருகுகள்..
இதயங்களின் சருகுகள்..
நடக்கின்றேன்.
அந்த ரோஜாசருகுக‌ளின்
உயிர் இரைச்சல்களை தாங்க முடியவில்லை.
நினைவும் இனிக்கிறது.
சுமையும் இனிக்கிறது.
பயணம் தொடர்கிறது.
கால் செருப்புகளில்
நினைவுத்தூசிகள் ஒட்டிக்கொள்ள‌
நடக்கிறேன்..ஆம்..நடக்கிறேன்.

===============================================







திங்கள், 8 பிப்ரவரி, 2016

நான் ருத்ரா இ.பரமசிவன்.







நான் ருத்ரா இ.பரமசிவன்.

நெல்லை தாமிரபரணிக்கரையில் கல்லிடைக்குறிச்சி என் பிறந்த ஊர்.
01.06.1943 ல் பிறந்தேன்.தற்போது மதுரை "கற்பக ந‌கரில்" வசிக்கிறேன்.மதுரை எல்.ஐ.சி யில் ஆஃபீசராய் பணியாற்றி ஓய்வு பெற்றவன்.என் துணைவியார் பி.எஸ்.என்.எல்.லில் அதிகாரியாய் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.பிள்ளகள் இருவர். (ஆண்+பெண்) அவர்களும் பேரன் பேத்திகளும் அமெரிக்கா கலிஃபோர்னியாவில் உள்ளனர்.எனக்கு வலைப்பூவில் கவிதைகள் எழுதுவது மட்டுமே தொழில்.நான் 1969லிருந்து எழுதி வருகிறேன்.(செம்மலர் கல்கி ஜூனியர் விகடன் குங்குமம்...) 2000க்கு பிறகு வலைப்பூ எழுத்தாளன்.எனக்கு கணிதப்பாடங்கள் (டோபாலஜி காம்ப்லெக் ஸ் அனாலிசிஸ்..மற்றும் குவாண்டம் மெகானிக்ஸ் ஸ்ட்ரிங்க் தியரி கோட்பாடுகள் பற்றி படிப்பதும் எழுதுவதும் மிகவும் பிடிக்கும்.

வலைப்பூ மற்றும் கூகிள் குழும நண்பர்கள் (மின் தமிழ்,வல்லமை
முதலிய மின்மடல்கள்) எனக்கு பிரியமானவர்கள்.

உங்கள் பார்வையும் கருத்துகளுமே என் அன்றாட ஆகாரம்.

வணக்கம்

அன்புடன் ருத்ரா

தாமிரபரணி எனும் புத்தகம் .





தாமிரபரணி  எனும் புத்தகம் .
===============================================ருத்ரா இ.பரமசிவன்.

உன்னை நதி என்பர்கள்
வெறும் "ஹெச்.டூ.ஓ" என்று
வகுப்பில் படித்ததை ஒப்பிப்பார்கள்.
நீ எங்கள் உயிர்.
நீ எங்கள் காதல்.
ஒரு காதலனுக்கு காதலி.
ஒரு காதலிக்கு காதலனின் பளிங்கு முகம்.
அகத்தியன் கமண்டலத்திற்கும்
முன்னே
உதித்த ஒரு தமிழ் மண்டலத்தின்
தண்ணொளி நீ .
எங்கள் ஊர் கல்லிடைக்குறிச்சியில்
பத்தமடைப்பாய் போல் தான்
விரித்துக கிடப்பாய்.
அந்த பட்டு சுகத்தில்
புரண்டவர்கள்
அந்த சொர்க்கங்க்களையெல்லாம்
தூ வென்று துப்பி விடுவார்கள்.
தாமிர பரணி எனும் புத்தகத்தைப்புரட்டினால்
திலகர் வித்தியாலய உயர்நிலைப்பள்ளியின்
ஏழாம் வகுப்பில் ஒரு நாள்
ஆசிரியர் என்னை வகுப்பின் முதல் மாணவனாக
என் விடைத்தாளை உயர்த்திக்காட்டி
எனக்கு மகுடம் சூட்டியதை
என்னால் மறக்கவே முடியாது!
ஐன்ஸ்ட்டின் நோபல் பரிசு அது எனக்கு.
உன் நீர்ப்பிம்பத்தில்
அதை உற்றுப்பார்த்து உவகை கொள்வேன்.

உன்னில் தோய்ந்து குளிக்க வருமுன்
அந்த மானேந்தியப்பர் கோவில்
மதில் சுவர் வழியே தான் வருவோம்.
எங்கள் தலைக்கு மேலே
சுர புன்னை மரத்தின்
இனிப்பு முத்துக்கள் எனும்
மொட்டுக்கள்
கீழே இறைந்து கிடக்கும்
அவற்றை வாயில் போட்டு
உன்னை அசை போடுவோம்.
கலிஃபோர்னியாவின் கடற்கரை
நீர் விளிம்பில்
கால் நனைத்த போதும்
அந்த கடற்குருகுகளின் கூர் அலகுகள்
எதோ ஒரு கோகோகோலா குப்பிக்குள்
குடைந்து கொண்டிருந்த போதும்
உன்னைக் குடைந்து குடைந்து
தலை நீட்டும்
அந்த நீர்க் காக்கைகளின்
கருப்புச்சிறகு "நந்தலாலா"க்களிடமே
மனம் பிசைந்து நிற்கும்!
கங்கை காவிரி போல்
நீ ஒரு ரத்னக்கம்பளம் இல்லை தான்.
ஆனால்
எங்கள் ரத்தம்.
எங்கள் இதயங்களின் மெல்லிய சத்தம்.

========================================================