ஞாயிறு, 8 அக்டோபர், 2017

மூட்டைப்பூச்சிகள்

மூட்டைப்பூச்சிகள்
=======================================ருத்ரா

உன்னிடம் சரணடைந்தேன்.
இனி என்கால்கள் உன் சுவட்டில்.
என் பார்வைகள் உன் விழியில்.
என் கனவுகள்
தினம் தினம் நீ
அவிழ்த்தெறியும் பூச்சரங்கள்.
என் முகத்தை நீ
இன்னும் பார்க்கவில்லை.
என் சொல் உன் செவியில்
இன்னும் விழுந்ததில்லை.
நீ இன்றி
இந்த வாழ்க்கையெல்லாம்
வெறும் தூசு துரும்புகள்.
என்னைக்காதலிக்கவில்லை
என்றாவது
என் முகம் பார்த்து சொல்லிவிடு.
அது போதும்.
அந்த கல்லறையில் நான் தூங்க..
அந்த தூங்குமூஞ்சி மரங்களின்
சிறு சிறு சாமரங்களைப்போன்ற‌
அந்த பூக்கள்தாலாட்டும்
அது போதும்.
அது தூவும் மகரந்தங்கள் எல்லாம்
உன் நினைவு தான்.
பயப்படாதே
நான் இன்னும் சாகவில்லை.
நான் போகும்போதும் வரும்போதும்
அந்த பாதையில்
உள்ள கல்லறைத்தொட்டத்தில்
ஒரு இடம் பார்த்திருக்கிறேன்.
செண்ட் அதிக விலையில்லை.
ஒரு மூட்டைப்பூச்சி
மருந்து பாட்டிலின் விலை தான்.
.....
.........
"டமார்."

எதிரே வரும் லாரி மரத்தில் மோத‌
நடுவில் நான் நசுங்கினேன்.
ஆனால்
என்ன ஆச்சரியம்
நான் பிழைத்துக்கொண்டேன்.
அதில் நசுங்கி கூழாகி இறந்தது
அந்த காதல் மட்டுமே!
அந்த மருந்து பாட்டிலின் மருந்தை
தெளிக்காமலேயே
என்னை பிச்சு பிச்சுக்கடித்த‌
காதல் எனும் மூட்டைப்பூச்சிகள்
செத்தே போயின!

=================================================


திங்கள், 2 அக்டோபர், 2017

நடக்கிறேன்




நடக்கிறேன்
===========================================ருத்ரா

மண்ணின் நீண்ட பாதையெல்லாம்
ரோஜாசருகுகள்.
அதன் மீது கால்வைத்து நடப்பதா?
தயங்கி தயங்கி நடக்கிறேன்.
சர்ரெக் என்ற அவற்றின்
ஒலிக்கூட்டங்களுக்குள்
தனியாயும் சில ஒலிகள்.
அது எங்கோ தொலைதூரகடலுக்குள்
நங்கூரமாய் விழுகிறது.
நான் நடக்கிறேன்.
பாதையில் பல்வேறு காலடிச்சுவடுகள்.
ரோஜாச்சருகுகள் மறைந்து போயின.
என் எண்ணம் எப்போதும்
உயர்ந்து கொண்டே போனதுண்டு.
யார் அந்த ராட்சத ரெக்கைகளை எனக்கு
ஒட்டவைத்தார்கள்?
என்று எனக்குத்தெரியாது.
அவற்றை சடசடத்த போது
அவற்றில் ஒட்டிக்கிடந்த‌
அந்த நட்சத்திரங்கள் தான்
தரையில் உதிர்ந்தன.கூடவே
அந்த ரோஜாசருகுகளும்!
வாழ்க்கையின் கசப்புகளுக்கு
நடுவில் தேன் துளிகளாக‌
அந்த ரோஜா சருகுகள்.
ஓரப்பார்வையாய் அவள் ஒரு நாள்
என்னைப்பார்த்தாள்.
அதன் பிறகு அவள் முழுமுகம் பார்த்து
அவள் மனம் நுழைய விரும்பி
நடையாய் நடந்திருக்கிறேன்.
இன்னும் தான் நடந்து கொண்டிருக்கிறேன்.
என் கூடு.என் குஞ்சுகள்.
என் இன்னுயிர்த்துணையாய்
அந்த பறவையையும்
தோள் மீது சுமந்து கொண்டு
நடக்கிறேன்.
நாட்கள்
இலைச்சருகுகள்..
இதயங்களின் சருகுகள்..
நடக்கின்றேன்.
அந்த ரோஜாசருகுக‌ளின்
உயிர் இரைச்சல்களை தாங்க முடியவில்லை.
நினைவும் இனிக்கிறது.
சுமையும் இனிக்கிறது.
பயணம் தொடர்கிறது.
கால் செருப்புகளில்
நினைவுத்தூசிகள் ஒட்டிக்கொள்ள‌
நடக்கிறேன்..ஆம்..நடக்கிறேன்.

===============================================