தாமிரபரணி எனும் புத்தகம் .
===============================================ருத்ரா இ.பரமசிவன்.
உன்னை நதி என்பர்கள்
வெறும் "ஹெச்.டூ.ஓ" என்று
வகுப்பில் படித்ததை ஒப்பிப்பார்கள்.
நீ எங்கள் உயிர்.
நீ எங்கள் காதல்.
ஒரு காதலனுக்கு காதலி.
ஒரு காதலிக்கு காதலனின் பளிங்கு முகம்.
அகத்தியன் கமண்டலத்திற்கும்
முன்னே
உதித்த ஒரு தமிழ் மண்டலத்தின்
தண்ணொளி நீ .
எங்கள் ஊர் கல்லிடைக்குறிச்சியில்
பத்தமடைப்பாய் போல் தான்
விரித்துக கிடப்பாய்.
அந்த பட்டு சுகத்தில்
புரண்டவர்கள்
அந்த சொர்க்கங்க்களையெல்லாம்
தூ வென்று துப்பி விடுவார்கள்.
தாமிர பரணி எனும் புத்தகத்தைப்புரட்டினால்
திலகர் வித்தியாலய உயர்நிலைப்பள்ளியின்
ஏழாம் வகுப்பில் ஒரு நாள்
ஆசிரியர் என்னை வகுப்பின் முதல் மாணவனாக
என் விடைத்தாளை உயர்த்திக்காட்டி
எனக்கு மகுடம் சூட்டியதை
என்னால் மறக்கவே முடியாது!
ஐன்ஸ்ட்டின் நோபல் பரிசு அது எனக்கு.
உன் நீர்ப்பிம்பத்தில்
அதை உற்றுப்பார்த்து உவகை கொள்வேன்.
அந்த மானேந்தியப்பர் கோவில்
மதில் சுவர் வழியே தான் வருவோம்.
எங்கள் தலைக்கு மேலே
சுர புன்னை மரத்தின்
இனிப்பு முத்துக்கள் எனும்
மொட்டுக்கள்
கீழே இறைந்து கிடக்கும்
அவற்றை வாயில் போட்டு
உன்னை அசை போடுவோம்.
கலிஃபோர்னியாவின் கடற்கரை
நீர் விளிம்பில்
கால் நனைத்த போதும்
அந்த கடற்குருகுகளின் கூர் அலகுகள்
எதோ ஒரு கோகோகோலா குப்பிக்குள்
குடைந்து கொண்டிருந்த போதும்
உன்னைக் குடைந்து குடைந்து
தலை நீட்டும்
அந்த நீர்க் காக்கைகளின்
கருப்புச்சிறகு "நந்தலாலா"க்களிடமே
மனம் பிசைந்து நிற்கும்!
கங்கை காவிரி போல்
நீ ஒரு ரத்னக்கம்பளம் இல்லை தான்.
ஆனால்
எங்கள் ரத்தம்.
எங்கள் இதயங்களின் மெல்லிய சத்தம்.
========================================================

அன்பு நண்பர் திரு.மீ.விசுவநாதன் அவர்களுக்கு ருத்ரா எனும் இ.பரமசிவன் எழுதுவது...
பதிலளிநீக்குஉங்கள் மடல் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.கல்லிடைக்குகுறிச்சியின் தாமிரபரணி எனும் அந்த "இணைப்பு நாளத்தில்" நம் ஊர் மண் வாசனை தான் இதயதுடிப்புகளாய் ஒலித்துக்கொண்டிருக்கும்.அது போல் நம் ஊர் "திலகர் வித்யாலயமே" நம் உள்ளப்பெருங்கோயில். அதன் கணீர் என்ற மணியோசையாய் என் நெஞ்சில் இன்னும் எதிரொலித்துக்கொண்டிருப்பது மாண்பு மிகு எங்கள் தலைமை ஆசிரியர் திரு ரங்கநாத ராவ் (1960)அவர்களின் அந்த ஆங்கில உரைவீச்சு தான்.
உங்கள் மடல் கல்லிடைக்குறிச்சியின் சிந்தனைப்புயல் மையத்தை
கிளறி விட்டிருக்கிறது.அதற்கு மிக மிக நன்றி.
அன்புடன் ருத்ரா